Sunday, November 27, 2011

சமச்சீர்க் கல்வியில் அரங்கேறும் சமூக (அ)நீதி?! (பதிவு: ஜூலை-2011)


எல்லோரும் இந்நாட்டு மன்னர் சனநாயகத்தில்!..... எவராயினும் சட்டத்தின் முன் சமமே!  செவிதனிலே கேட்பதற்கும், ஏட்டினிலே பார்ப்பதற்கும் நாவினிக்கும் பரவசமே! நடைமுறையில் உண்டா?..... 


‘அண்டத்திற்கே அறம் சொன்ன அருந்தமிழர்’
ஆழறிவை மழுங்கடிக்க பொய்புரட்டு கதை கட்டி - நம்                                
உயிர்மெய்க்குள் புகுத்திவிட்ட மூட நம்பிக்கைகளால்
சாதி மத குல பேதம் இன்னும் சாகாமல் இருக்குதிங்கே!

பிழைப்பு தேடிவந்த வந்தேறிகள் - பிறர்
உழைப்பு சுரண்டி சுகமாய் வாழ்வதற்கோர்
வழி கண்டார்; நால்வருண பேதம் பேசி
தமிழர்குல மாண்பினிலே தீண்டாமை திணித்தனரே!

சிறுத்தாலும் குறையாத வீரம் கொண்ட நண்டமிழர்
பிரித்தாளும் சூழ்ச்சியர் விரித்த வலைக்குள் சிக்குண்டு
மதியை இழக்கலானார்; விதியை மதிக்கலானார்!
சீர்தூக்க இவண் இன்னும் எத்தனை பெரியார் வேண்டுமோ?

பிறப்பால் அனைவரும் சமம் இங்கே
பகுத்தறிவு சொல்லும் வழி… இது சமதர்மம்!
இறந்த பிணமும் இன்ன இனம் என்று
தரம் பிரிக்கும் வேதமொழி… இது மனுதர்மம்?!

சமம் - சமச்சீர் - சமத்துவம் என்ற சந்தங்களை
இங்கே ஓதலாமா? - தேவையின்றி வேதம்
ஓதுவார் வீண் சாபத்திற்கு ஆளாகலாமா!
சமயம் வைத்து சமயம் கழிப்போரை பழிக்கலாமா?.... 

விளிம்புநிலை சமூகம் விழித்தெழும் நாளெதுவோ…
சமூக சமத்துவம் உயிர்த்தெழும் நாளதுவே….
வாழ்வுநிலை ஓங்கிவிட்டால் குலத்தாழ்வுநிலை குன்றிவிடும்!
அந்நிலைக்கு ஆதாரம் தரமான கல்வியன்றி வேறென்ன?

அய்யோ பாரீர்! பாரெங்கும் இருப்பது பொதுக்கல்வி…
அந்தணர் ஆதிக்க தமிழ் மண்ணில் மட்டும்
கலவி வேதம் போன்றே கல்வியிலும் நால்வகையாம்..
குலக்கல்வி குடிமண்ணில் சமக் கல்வி கூடாதோ?....

சமச்சீர் கல்வி வேண்டி ஆண்டாண்டாய்
ஆர்ப்பாட்டம் - போராட்டம் ஆங்காங்கே நடந்திற்று!
ஆண்ட ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது
படியளக்கும் கல்விக்கொள்ளையர்படியே படிப்பின் போக்கு!
                                                                                                      
இறுதியில் நாற்பதைம்பது ஆண்டு வேட்கைக்கு
இசைவு தந்தார் மேநாள் முதல்வர்!....
தமிழ்கூறும் நல்லுலகின் தம்பட்டத் தலைவன்
திராவிடப் (திராவகப்) போர்வாள் திமுக கருணாநிதி…

அரங்கேற்றும் வழிதனை ஆராய்ந்து அரசுக்கு அறிவுறுத்த
அமைத்திட்டார் வல்லுநர் குழுவை முத்துக்குமரன் தலைமையிலே
அக்குழுவும் சால்போடும் சான்றோடும் பகுத்தாய்ந்து
சமர்ப்பித்த ஆய்வறிக்கை கூறுகள் நூறுக்கும் மேலாக….

ஆரிய சூழ்ச்சியாவது ‘அவாள்’ நிறம்போன்றே
பளீர் எனத்தெறிக்கும்; பசப்பல் கொஞ்சம் இருக்கும்!
பார்த்தமட்டில் புரியாது பார்ப்பனியத்தை மிஞ்சுகின்ற
அஞ்சுகத்தின் அரும்புதல்வன் அரசியல் அச்சாரம்! 

ஆய்வறிக்கை இயம்பியது அனைத்து கூறுகளும்
அமையப்பெற்ற… சீரான சம கல்வி என்பதுவே…
அய்முறை முதல்வர் செய்ததுவோ பொதுப்பாடம்
எனும் கூறே; அதிலும் விடார் ‘தம்பாட்டு – தம்பட்டம்’!

திரும்பும் திசையெல்லாம் தி மு க விற்கு வசை பாடல்
இருந்தும் இறுமாப்பு குறையவில்லை; கரும்பும் கசக்கலானது…
வந்தது தேர்தல்; மாறியது ஆட்சி - உருமாறியது காட்சி!
மக்கள் விரும்பித் தந்ததல்ல;வெறுப்பின் விளைச்சலது’!

எப்படியோ சட்டப்படி அதிகாரம் அ தி மு க விடம்…
(வி)வேக விளக்காம் செயலலிதா செங்கோல் சிலிர்த்தது!
ஈழக்கொலைக்கு எதிராய் தீர்மானம் - தமிழர் ஈரல் குளிர்ந்தது!
விதிவிலக்கு வேண்டாமா?... மதிவிளக்கை அணைக்கலானார்!

சோழியன் குடுமி சும்மா ஆடுமா?... - தமிழர்
நலன் காக்கும் நல்லாட்சி நிலைக்கவில்லை…
ஆதிக்க சக்திகளின் பின்னூட்ட சூழ்ச்சியாலே
ஈரைந்து நிமிட ஆய்வில் இரையானது சமச்சீர்க் கல்வி…
                                                    
பொத்தாம் பொதுவாக தரமில்லை என்போர் - முன்பு
அய்ந்தாறு ஆண்டுகளாய் எதிர்க்காமல் எங்குபோனார்?
ஆடு மாடுவரை அறிக்கையில்… நடந்த தேர்தலிலே….
இதையேன் அறிவிக்க மறந்தார் மக்கள் மன்றத்திலே?

சமச்சீர்க் கல்வி என்பது ஒரு சமுத்திரப் பயணம்…
பொதுப்பாடம் - அத்திட்டத்தின் முகப்பே…..
பயணத்தை தொடர்ந்திடுவோம்; பாதையிலே சரிசெய்வோம்
பாங்குரைத்தனர் கல்வியாளர்கள் - பற்றாளர்கள் பலப்பலர்! 

எவர் சொல்லியும் கேட்ட பாடில்லை - கல்வி
வல்லுநர் வழி நடக்கும் கல்வித்துறையில்  
நீதிமன்றம் தீர்ப்புரைக்கும் நிர்ப்பந்தம் - நீதிக்காவது
ஆவண செய்வாரா?... ஆதிக்க ஆணவம் உச்சம்போனது!

உச்சநீதியோ அரசின்பால் நம்பிக்கையால் - நுண்மான்
குழுவமைக்க மனுசெய்த அரசிடமே அனுமதி ஈன்றது!
‘நண்டுக்கு காவல் நரியை வைத்தாற் போலானது’
பாடத்திட்டத்தை ஆராய இவ்வரசு அமைத்த குழு!

கல்வி ஒளி பெற்ற கண்ணினாய் மாற தமிழகப்
பள்ளிகளில் பயில்வோர் ஒரு கோடியே 12 இலட்சம்!
அரசுப் பள்ளிகளில் படிப்போர் 107 இலட்சம்!
வெறும் 3 இலட்சம் மட்டுமே பதின்நிலைப்(மெட்ரிக்) பள்ளிகளில்!

இங்கே பாருங்கள் தமிழக அரசின் நேர்மையை – ஜனநாயகத்தை!
நுண்மான் குழுவில் ஒருமானும் இல்லை 107 இலட்சம் சார்பாக….
கல்வியாளர் போர்வையில் கல்விக் கொள்ளையர்கள் குழுவினிலே - இந்த
மனுநீதிக் குழுவிலிருந்து சமூக நீதி கிடைத்திடுமா? சிந்திப்பீர்!

இருப்போர்க்கு ஒரு கல்வி; இல்லாதோர்க்கு ஒரு கல்வி’
இது நவீன தீண்டாமை என்றோம்; மறுக்கிறார்கள்….
இதுதான் ஜனநாயகத்தின் அடி நாதமாம்! - ஊழ்வினை
ஊதுகுழல்களிடம் வேறென்ன சத்தம் வரும்?

போதாக்குறைக்கு நடப்பிலிருக்கும் சமச்சீர் பாடநூல்களிலும்
(பு)தைக்கப்படும் பூணூலின் தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல!
திருவள்ளுவர்க்கே போர்த்திவிட்டார் பச்சை திரைச்சீலை..
திருந்தாமனமே! அய்யன் என்ன திமுக ஆலோசகரா?.. 

காந்தத்தின் வட-தென் துருவம்… கருப்பு-சிவப்பு நிறத்தில்
இது அறிவியல் பாடம் சுட்டுகின்ற நிற வேறுபாடு
வடக்கிலிருந்து தென் துருவம் பெயர்ந்தோர்க்கு
பொறுக்கவில்லை! இது திராவிட நிறத்திணிப்பாம்…?

எண் எழுத்து இகழேல்! ஓதுவது ஒழியேல்!
ஓதிய ஔவையின் பெயரால் 'ஔ' எழுத்திற்கே சிறப்பு…
ஔவியம் செய்தனர் 'ஔ' வை - என்ன காரணமோ? – கவனிக்க!...
காழ்ப்புணர்வு மட்டுமல்ல; இன உணர்வும் இருக்குதிங்கே!

பாநூலை வடித்துவிட்டால் அவன் பாவலனா?….
பூணூலை போட்டிருந்தானா? இல்லையேல் புரட்சிக் கவியல்ல!
வந்துவிட்டது பாரதிதாசனின் ஆத்திச்சூடிக்கும் தரத்தீட்டு?!
தரம் உயர்த்தத் துடிப்போரின் இலட்சணம் இதுதானோ?

கண்டனங்கள் தொடர்கின்றன; அரசின் மெத்தனமும் தொடர்கிறது….
வேறெங்கும் நிகழ்ந்திராத வீண் வரலாற்றுப் பிழைக்குள்
பாடத்திட்டக் குற்றச்சாட்டும், பாடமில்லாப் பள்ளிகளும்!
இருதிங்கள் நெருங்குது; தீர்ப்பும் தள்ளிப்போனது….

நல்லவேளை அச்சம் தகர்ந்தது; வாய்மை வென்றது!
சமச்சீர்க் கல்விக்கு உயிர் தந்தது உயர்நீதி
அந்தணர்க்கு ஆச்சாரமானது! மீண்டும் மேல்முறையீடாம்…
விழுந்தாலும் ஒட்டவில்லையாம் மண்…. மீசை இல்லாததாலா?!

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில்தானே …மீண்டும்
உயர்நீதிமன்றம் வழக்காய்ந்து உரக்கச் சொன்னது தீர்ப்பை!
எதுவரை இவர்களின் யுத்தம்….மறுப்பு…முரட்டு பிடிவாதம்….
அவர்கள் எதிர்பார்க்கிற (அ)நீதி!...  அரங்கேறும் வரையா? 

தராசுமுள்… அரசுக்கு சுமூக நீதியாய் சாயுமோ….   
மாணவர்நலன் காக்கும் சமூக நீதியாய் நிற்குமோ….
எந்த உச்ச பட்ச மன்றமும் மக்கள் மன்றத்திற்கு
சேவகர்களே, ஒருபோதும் மன்னரல்ல!

ஆறுமாத பலனுக்கு நெல்லை நடுங்கள்
ஓராண்டு பலனுக்கு கரும்பை நடுங்கள்
நூறாண்டு பலனுக்கு கல்வியைக் கொடுங்கள்
இது பழமொழி; இதில் கல்வி நம் உரிமைமொழி

சமூக சமத்துவம் இறுதி இலட்சியம்!
கல்வியில் சமத்துவம் இன்றைய இலட்சியம்!!
அனைவருக்கும் அவசியம் தரமான கல்வி!
அதைச் சாத்தியமாக்கும் சமச்சீர் கல்வி!!

வேண்டுகோள்: நண்பர்களே! சிலப்பல நூற்றாண்டுகாளாகவே சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கக் கூட்டத்திடம் நம் தமிழினம்! தாய்மண்ணில் தமிழர்கள் முழு சுதந்திரத்தோடு (தன்னுணர்வு – தன்னுரிமை சூழ) வாழ முடியாத அவல நிலை! காரணம் முழுமையான அரசியல், சமூக சுதந்திரம் இன்னும் ஆதிக்க சக்திகளிடமிருந்து மீட்கப்படாததே! காலப்போக்கில்  அறிவுசார் வளர்ச்சியால் மீண்டுவிடும் என்று எண்ணுவதற்கும் இடமில்லை. மனித சமூகத்தை வளப்படுத்துகின்ற அத்தகைய அறிவூட்டல் கல்விக்கும் எதிராக வரிந்துக் கட்டிக்கொண்டு நம்மை அடக்கத் துடிக்கிறது அந்த ஆதிக்க ஆரியக் கூட்டம்.

இனியும் பொறுத்தலாகாது….  இது வெறும் அரசியல் தர்க்கமன்று!
மீண்டும் தாண்டவமாடும்  வர்ணாசிரம - வர்க்கப் போராட்டமே……

வாருங்கள் ஒருங்கிணைவோம்…… சமூக நீதிக்காக!
வென்றெடுப்போம் களம் கண்டு… நம் வருங்கால சந்ததிக்காக!!

இவண்
சமத்துவ வேட்கையுடன்,
தமிழ்ச்சமூகன்


No comments:

Post a Comment